தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் பம்மல் - திருநீர்மலை சாலையில் பாதிப்பு

பம்மல், பம்மல் - திருநீர்மலை பிரதான சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, சரியாக மூடப்படாத பள்ளங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், பம்மல் காவல் உதவி மையம் அருகே பிரிந்து செல்கிறது, பம்மல்- திருநீர்மலை பிரதான சாலை. 60 சதவீதம் கனரக வாகனங்கள், இச்சாலை வழியாக திருநீர்மலை, தாம்பரம், குன்றத்துார், வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.

குறிப்பாக, ஜல்லி, எம் - சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் அதிகம். அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பின், தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை.

அதனால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நாள்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்லும் முதியோர், பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

சில நேரங்களில், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அதனால், பெரும் பாதிப்பு ஏற்படும் முன், பள்ளத்தை முறையாக மூடி, அதன்மேல் சாலை ஒட்டுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டபோது, 'பாதாள சாக்கடை குழாய் பணி முடிந்து, எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தில், சிமென்ட் ஒட்டுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள், இன்னும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை' என்றனர்.

Advertisement