தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வீரவணக்க பேரணி

தேன்கனிக்கோட்டை, தமிழக விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின்சாரத்தை பெற போராடி உயிர் நீத்த, 59 விவசாயிகள் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டையில் நேற்று வீரவணக்க பேரணி மற்றும் மாநாடு நடந்தது.



மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, துணை செயலாளர் கூபால்ரெட்டி, கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் கிருஷ்ணப்பா தலைமையில், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாட்டு வண்டிகளிலும், நடந்தும் பேரணியாக சென்றனர். அங்கு நடந்த மாநாட்டில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.


மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் சேர்த்து, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய, சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் உரிமை மின்சார சட்டத்தை ரத்து செய்ய முடியாத வகையில், தனியாக சட்டம் இயற்ற வேண்டும். பூந்தோட்ட மின் இணைப்புகளை, கட்டணமில்லா வேளாண் மின் இணைப்புகளாக மாற்ற வேண்டும்.

தடையில்லாத, 24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கும், 6,000 ரூபாயை, குத்தகை விவசாயிகள் உட்பட அனைவருக்கும் எந்த நிபந்தனையுமின்றி, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கள் இறக்கி விற்க, குடிக்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில மகளிரணி செயலாளர் நாகராணி, செயற்குழு உறுப்பினர் முத்துலட்சுமி, நுகர்வோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement