சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் போஸ்டர்களால் அலங்கோலம்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் ஒட்டப்படும் போஸ்டர்களால் பாலம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது.

இங்கு சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

மேலும் ஆப்பூர் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 138.27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் மேம்பாலத்தின் துாண்கள், சுவர்களில் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மேம்பாலம் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இருந்த நிலையில் அதில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் இல்லாத பகுதியில் இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டப்படுவதால் போஸ்டர் ஒட்டுவோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது

எனவே மேம்பாலத்தில் போஸ்டர் ஒட்ட தடை விதித்து வண்ண ஓவியங்களை வரைய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement