நுால் பிடித்த மாதிரி நகர வீதிகள் புதுச்சேரியின் சிற்பி யார் தெரியுமா

1

புதுச்சேரி நகரம் கொள்கை அழகு. நேர் கோட்டில் அமைந்துள்ள வீதிகள் புதுச்சேரி நகரத்திற்கு மேலும் அழகு கூட்டுகின்றன. ஒவ்வொரு வீதியும் நேர்கோட்டில் கடற்கரை நோக்கி சென்று சங்கமித்து கொள்ளுவது அழகு.

இதனால் தான், புதுச்சேரியை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், நுால் பிடித்த மாதிரி இருக்கும் வீதிகளை புகழாமல் செல்வதில்லை. புதுச்சேரி நகரம் பல்வேறு போர் சூழலில் விழுந்து தரைமட்டமாக்கி இருக்கிறது. அதே வேகத்தில் கம்பீரமாக எழுந்தும் நின்றிருக்கிறது.

புதுச்சேரியில் நேர்கோட்டில் வீதிகள் அமைந்தற்கு பின்னணியில் வீரமான போர் வரலாறும் புதைந்து இருக்கிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே அடிக்கடி போர் மூண்டபோதெல்லாம், புதுச்சேரியை கைப்பற்றிய பிரிட்டிஷார் பலத்த அடியை கொடுத்தனர். பிரெஞ்சியர்கள் எழுந்திருக்காதப்படி, புதுச்சேரி கோட்டைகளை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

அப்படி புதுச்சேரியை இழந்தபோதெல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு பிறகு மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் பெற்றும் வந்தனர். இதேபோல், 1767ல் இழந்த புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் திரும்ப பெற்றபோது, லா தெ லொரிஸ்தோன் புதுச்சேரியின் கவர்னராக பொறுப்பேற்றார்.

அவர் வந்தபோது போர் சூழலில் சிக்கி புதுச்சேரி அலங்கோலமாக காணப்பட்டது. ஆளவரமற்று கிடந்தது. புதுச்சேரி நகரை சுற்றி இருந்த கோட்டைகள் அனைத்துமே தரைமட்டமாகி இருந்தனர். கவர்னர் தங்குவதற்கு கூட இடம் இல்லை.

ஒழுகரையில் தங்கி கொண்ட கவர்னர், புதுச்சேரியை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என, எண்ணினார். புதுச்சேரியை எப்படியெல்லாம் திட்டமிட்டு கட்ட வேண்டும் என, சிந்தித்து கொண்டே இருந்தார்.

சிறந்த பொறியாளரான புர்செய் நேரில் அழைத்து பேசினார். அவரின் துணையோடு பாழடைந்து கிடந்த புதுச்சேரி நகரை புதுப்பிக்கும் பணியை துவங்கினார். கோணல் மாணலாக இருந்த சாலைகளை நேர்கோட்டில் நுால் பிடித்த மாதிரி அமைக்க உத்தரவிட்டார். இது எல்லோருக்கும் விந்தையாகவே இருந்தது.

சந்துபோந்துகளாக இருந்த குறுகிய சாலைகள் காணாமல்போயின. சாலைகள் விசாலமாக்கப்பட்டன. மக்களும் கவர்னரின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு தந்து வீட்டின் இடங்களை தந்தனர். கடைசியாக அனைத்து பணிகளும் முடிந்தபோது புதுச்சேரி நகரம் சிறப்பான நகரமாக நேர்கோட்டில் அனைத்து வீதிகளுடன் அழகான நகரமாக அமைந்திருந்தது.

அப்படி அமைக்கப்பட்ட வீதிகள் தான் இன்றைக்கும் புதுச்சேரியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. புதுச்சேரி நகரின் சிற்பி என்றால், கவர்னர் லா தெ லொரிஸ்தோன் தான்.

50 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அளவிற்கு பிரெஞ்சு காலத்தில் வடிவமைக்கப்பட்ட புதுச்சேரி நகரம் இன்றைக்கும் உலக அளவில் பெருமை தேடி தந்துகொண்டு இருக்கிறது.

Advertisement