ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

வில்லியனுார்: வில்லியனுார் பகுதியில் ஆப்பரேஷன் திரிசூல் என்ற பெயரில் குற்ற பின்னனியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு எஸ்.பி., வம்சத்திர ரெட்டி தலைமையில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், தமிழரசன், கிரைம் போலீஸ் டீம் மற்றும் கமாண்டோ போலீசார் உள்ளிட்டோர் அரசூர், கணுவாப்பேட்டை, புதுநகர், அம்மா நகர், நடராஜன் நகர், பொறையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது நடராஜன் நகரைச் சேர்ந்த சின்ன அய்யப்பன் (26), வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணைக்காக சின்ன அய்யப்பனை ஸ்டேஷன் அழைத்து சென்றனர். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 குற்றவாளிகளை பிடித்து விசாரித்தனர்.

Advertisement