மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

கோவை; பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற (நகராட்சி மற்றும் மாநகராட்சி) தலா, 10 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிசுகள் வழங்கினர்.

அப்போது கலெக்டர் பேசுகையில்,''இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகள் உயர்கல்வி பயில ஊக்குவிப்பாகவும், பெற்றோருக்கு பெருமையாகவும் அமையும்,'' என்றார்.

மேயர் ரங்கநாயகி, கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சுஜாத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement