பனம் பழம் சீசன் துவக்கம்

பொங்கலுார்; கற்பக விருட்சமான பனைமரத்தின் பயன்களை, தற்போதைய இளைய தலைமுறையினர் உணர்ந்துள்ளனர். பனை விதை நடவு அதிகரித்து வருகிறது.

சித்திரை, வைகாசி மாதங்களில் நுங்கு சீசன் களைகட்டி இருந்தது. தற்போது நுங்கு வெட்டியது போக மீதமுள்ள காய்கள் பழுத்து கீழே விழத் துவங்கி உள்ளது. விவசாயிகள் பனம் பழங்களை ஆடு, மாடுகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

அடர் தீவனச் செலவு குறைகிறது. முன்பு பஞ்சம் ஏற்பட்ட போதெல்லாம் பனம் பழங்களே பசியை போக்கின. இன்றும் பலர் பனம் பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் பனை விதை நடவு செய்வோர் வடகிழக்கு பருவமழை துவங்கும் புரட்டாசி மாதத்தில் தான் தங்கள் பணிகளை துவங்குகின்றனர். ஆனால், கீழே விழுந்து கிடக்கும் பழங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் பெய்யும் மழைக்கு முளைத்து விடும். தொடர்ச்சியாக மழை இல்லாததால் அவை கருகி விடும். அவை மீண்டும் முளைக்காது. அதன் பின் அந்த விதைகளை நடவு செய்வது பயனற்றது.

பனை விதை நடவு செய்ய ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், விவசாயிகள் இப்போது இருந்தே அதை சேகரித்து ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமித்து வைத்து, நடவு செய்தால் முளைப்பு திறன் நுாறு சதவீதம் இருக்கும். அதை தற்போது இருந்தே முன்கூட்டியே நடவு செய்தாலும் முளைத்து மரமாக வளர்ந்து விடும்.

Advertisement