பூலுவப்பட்டி நால் ரோடு கடக்கிறார்கள் கடுப்போடு; உயர்மட்ட பாலம் அமைத்தாலே நெரிசலுக்கு தீர்வு

திருப்பூர்: பூலுவப்பட்டி நால் ரோடு பகுதியில், வாகனங்கள் இடையூறின்றி பய ணிக்க, உயர்மட்டமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் - பெருமாநல்லுார் ரோட்டில், பூலுவப்பட்டி நால்ரோடு சந்திப்பு, சிக்னல் உள்ளது. வாவிபாளையம், நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வலப்புறமும், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், அண்ணா நெசவாளர் காலனி, திருமுருகன்பூண்டி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இடப்புறமும் சந்திக்கின்றன.
முக்கிய வழித்தடம்
திருப்பூரில் இருந்து நம்பியூர், குன்னத்துார், ஆதியூர், கோபி, பெருமாநல்லுார் வழி ஈரோடு, பெருந்துறை, அவிநாசி, கோவை பைபாஸ் செல்லும் வாகனங்கள் இவ்வழியாக பயணிக்கின்றன. நகரின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் நகருக்குள், தெற்கு பகுதிக்கு வர முக்கிய வழித்தடமாக பூலுவப்பட்டி சந்திப்பு உள்ளது.
விதிமுறை மீறல்கள்
இங்குள்ள சிக்னல் சரிவர வேலை செய்வதில்லை. மூன்று நிமிடம் வரை வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர் என்பதால், நேரக்கட்டுப்பாட்டை போக்குவரத்து போலீசார் அகற்றினர்; பீக்ஹவர் தருணங்களில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறை மீறி முன்னேறி செல்ல முயல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது.
10 ஆயிரம் வாகனங்கள்
தினமும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இவ்விடத்தை கடந்து செல்வதாக, நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு திசையில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல், இடையூறு இல்லாமல் பயணிக்க உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும்.
குறுகிய காலத்தில் நெருப்பெரிச்சல், வாவிபாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. வரும் ஆண்டுகளில் தற்போதுள்ளதை விட மேலும் நெரிசல் அதிகரிக்கும் என்பதால், இப்பகுதியில் ஆய்வு செய்து பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை முடிவெடுக்க வேண்டும்.
அலுவலகங்கள், மருத்துவமனை
செல்வதற்கு சிக்கலோ சிக்கல்
பூலுவப்பட்டி நால்ரோட்டை கடந்து தான் திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, மாவட்ட சுகாதார பணிகள் துறை அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருவோர் நால்ரோடு சிக்னலில் சிக்கி சிரமப்படுகின்றனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் மருத்துவமனை மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.