10ம் தேதி தேரோட்டம்; நல்லுார் கோலாகலம்

திருப்பூர்; தேரோட்டம் வரும் 10ம் தேதி நடப்பதையொட்டி, நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் களைகட்டியுள்ளது.

நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி - விசாலாட்சி அம்மன் கோவில் ஆனித் தேர்த் திருவிழா, 4ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.

மூன்றாவது நாளான நேற்று காலை, அபிஷேகம், அலங்கார பூஜை, சுவாமி வீதியுலா நடைபெற்றன; இரவு 7:00 மணிக்கு ராவணேஸ்வர வாகனத்தில் சோமாஸ்கந்தர் வீதி உலா வந்து, அருள்பாலித்தார்.

தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக, மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று, உடுமலை அய்யாசாமி குழுவினரின், திருவாசகம் இசை கச்சேரி நடைபெற்றது.

நான்காவது நாளான இன்று இரவு, அதிகார நந்தி வாகன காட்சி; நாளை, மூஷிகம், மயில், ரிஷபம், காமதேனு வாகன காட்சியுடன் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாள், மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன காட்சியும் நடைபெறுகின்றன.

வரும் 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, கைலாய வாத்தியம், கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டத்துடன், தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும் 13ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் யாக பூஜைகள் நடைபெறும்.

Advertisement