ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டும் 8 மாதங்களாக சமூக நலக்கூடம் பாழ்

நெமிலிச்சேரி:ஆக்கிரமிப்பில் சிக்கிய சமூக நலக்கூடம் மீட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பாழாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில் 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பழங்குடியினர் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் நெமிலிச்சேரி ஊராட்சியில், ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த 2003ல், அ.தி.மு.க., ஆட்சியில் 10 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் சமூக நலக்கூடம் ஒன்று கட்டப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட இந்த சமூக நலக்கூடம், அதன்பின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில், 2022ல், தி.மு.க.,வைச் சேர்ந்த நெமிலிச்சேரி அப்போதைய ஊராட்சி தலைவி, உறுப்பினர்கள் எதிர்ப்பை மீறி தனியார் அமைப்பு ஒன்றுக்கு வாடகைக்கு கொடுத்தார். இதனால், ஊராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டது.

இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து, கடந்த ஆண்டு சமூக நலக்கூடம் மீட்கப்பட்டது. ஆனால், எட்டு மாதங்களாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பாழாகி வருகிறது.

பொதுமக்கள் அதிக வாடகை கொடுத்து, தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அலுவலர்கள், சமூக நலக்கூடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement