ஆதரவற்றோருக்கு 'ஆபத்பாந்தவன்'

வீட்டில் உள்ளோர், சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவற்று நின்ற மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 150 பேருக்கும் மேலானவர்களுக்கு 'ஆபத்பாந்தவனாக' மாறி உள்ள பெங்களூரை சேர்ந்த திருநங்கை நக் ஷத்ரா.

ஆணாக பிறந்த இவர், தனக்குள் உள்ள பெண்மையை உணர்ந்தார். பெற்றோரும் தன்னை ஏற்காத போது, வீட்டில் இருந்து வெளியேறியவர், இன்று 150க்கும் மேற்பட்டோருக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

என் பெற்றோருக்கு மகனாக பிறந்தேன். நாளடைவில் எனக்குள் உள்ள மாற்றம் குறித்து யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை. மாணவர்களுடன் விளையாட எனக்கு விருப்பம் இல்லை.

இதை என் பெற்றோரிடம் கூறினேன். அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆண் போன்று நடந்து கொள் என்று அறிவுரை வழங்கினார்களே தவிர, எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசவில்லை.

பெண்கள் போன்று நடப்பது, பேசுவது என எனக்குள் பெண் தன்மை இருப்பதை பார்த்து பள்ளியில் பலரும் என்னை கேலி செய்தனர். அதுமட்டுமின்றி, என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினர். என் பெற்றோரே என்னை புரிந்து கொள்ளாதபோது, இவர்கள் எப்படி புரிந்து கொள்வர். நான் நானாக இருக்க முயற்சிக்கும் போதெல்லாம், இச்சமூகம் என்னை ஒதுக்கிவிடுமோ என்று அஞ்சினேன்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் உங்கள் உணர்வுகளை அடக்க முடியும். உங்களின் உண்மையான சுயரூபம் எப்போதுமே வர முயற்சிக்கும்; அது தான் நடந்தது.

நான் திருநங்கை என்பதை ஏற்க விரும்பாத என் தந்தை, என்னை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். என் பெற்றோருடன் இருந்தபோது எனக்கு அன்பு கிடைக்கவில்லை. உறைவிட பள்ளியில் தங்கி படிப்பதற்கான செலவுகளை பெற்றோர் பார்த்து கொண்டனர். ஆனால், ஒருமுறை கூட என்னை வந்து பார்க்கவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்தும், உயர்கல்வி படிக்க முடிவு செய்தேன். அப்போது தான், அவர்களுக்கு நான் தேவையில்லை என்பது புரிந்தது. இனி எந்த கஷ்டம் வந்தாலும், அதை நானே எதிர்கொள்ள வேண்டும் என்ற சுதந்திரம் கிடைத்தது.

ஒரு குழந்தைக்கு பெற்றோரின் அன்பு தான் முக்கியம். அது எனக்கு கிடைக்கவில்லை. இதை உணர்ந்தபோது, எனக்கு தெளிவு ஏற்பட்டது. துமகூரில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்தேன். பெங்களூரு சென்று, என் வாழ்க்கையை மீண்டும் வாழ துவங்கினேன். இன்றும் எனக்கு அந்த நாள் நினைவிருக்கிறது. அன்று நான் பெங்களூரு கெம்பே கவுடா ரயில் நிலையம் சென்று அடைந்தபோது, தனி ஆளாக இருந்தேன்.

பல நாட்கள் தெருக்களின் நடைபாதையில் உறங்கினேன். ஒருவேளை உணவு சாப்பிட, கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டேன். அப்போது தான், வீடு இல்லாதவர்களுக்கு உதவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபோது கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து, சொந்தமாக ஆதரவற்றோருக்கு இல்லம் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இது சாதாரண பணி இல்லை என்பது தெரியும்.

என் சேமிப்பு பணம், என் சமூகத்தை சேர்ந்த சில திருநங்கையர் உதவியுடன், 'நம்மனே சும்மனே' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை துவக்கினேன். என்னை போன்றோருக்கு வீடு, நிலம் வழங்க பலரும் தயங்கினார். இதனால், பல மாதங்கள் இடத்தை தேடி, கடைசியில் நகரிலேயே ஒரு இடத்தை கண்டுபிடித்தேன். 2018ல் இந்த அமைப்பை துவக்கினாலும், 2020ல் முறைப்படி பதிவு செய்தேன்.

வீட்டினரால் துரத்தப்பட்டவர்கள், வீடு இல்லாதவர்களுக்காக துவக்கப்பட்ட போது, 10 பேர் இருந்தனர். பின், 80 ஆக அதிகரித்து, தற்போது 150 பேர், ஜாதி, மதம், பின்புலம் எதை பற்றியும் கவலைப்படாமல், இங்கு வசித்து வருகின்றனர்.

உள்ளூர் போலீசாருடன் இணைந்து, சாலைகளில் ஆதரவற்று சுற்றித் திரிபவர்களுக்கு எங்கள் வீட்டில் அடைக்கலம் தருகிறோம். தன்னார்வலர்களும் எங்களுக்காக பணியாற்றுகின்றனர். இங்கு உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி, கல்வியும் கிடைக்கும்.

என் சொந்த பணத்திலும், சில திருநங்கையர் மூலமாகமும் நிதியுதவி கிடைக்கிறது. அரசு தரப்பில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், தனி நபர்கள் தாங்களாகவே முன் வந்து, மாதந்தோறும் நிதி உட்பட பல வழிகளில் உதவி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரது தொண்டு நிறுவனங்களுக்கு உதவ நினைப்போர், 77953 44572 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.




- நமது நிருபர் -

Advertisement