'ஆன்லைன்' சூதாட்டத்தை கட்டுப்படுத்த மசோதா தயார்; சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு முடிவு

பெங்களூரு : ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த, 'கர்நாடக காவல்துறை (திருத்த) மசோதா - 2025' வரைவு மசோதாவை தயாரித்துள்ள மாநில அரசு, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தால், பல குடும்பங்கள் சீரழிந்து, பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இதன் விளைவாக, ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த, 'கர்நாடக காவல்துறை (திருத்த) மசோதா - 2025' வரைவு மசோதாவை மாநில அரசு தயாரித்து உள்ளது.

வரைவு மசோதாவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 இன்டர்நெட், மொபைல் போன் செயலி அல்லது வெவ்வேறு சூதாட்ட தளத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 அதேவேளையில், திறமை அடிப்படையில் விளையாடும் போட்டிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய விளையாட்டு தளங்கள், முறையான உரிமம் பெற வேண்டும். மாநில அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தால், குறிப்பிட்ட திறன்கள், பயிற்சி, நிபுணத்துவம் மட்டுமே அனுமதிக்கப்படும். இல்லையெனில் அவை தடை செய்யப்படும்.

 சைபர் கிரைம் பிரிவு உட்பட மாநில போலீஸ் துறை, சட்ட விரோத ஆன்லைன் பந்தய தளங்கள், ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படும். இணையசேவை வழங்குவோர், சட்ட விரோத ஆன்லைன் பந்தயத்தை நேரடியாகவோ, மறைமுகமாவோ ஆதரிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ கூடாது. இந்த வரைவு சட்டமாக்கப்பட்டவுடன், முதல் முறை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும்; மீண்டும் தவறை செய்தால், மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

சட்ட விரோத சூதாட்டத்துக்கு ஆதரவு அளித்தாலோ, விளம்பரம் செய்தாலோ, அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ஆணையத்தின் செயல்பாடு என்ன?



முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, மாநில அரசு, கர்நாடக ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கும். இந்த ஆணையம், புதிய சட்டத்தின்படி, ஆன்லைன் கேமிங், சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தி கண்காணிக்கும்.

இதன் தலைவராக, சட்டம், பொது நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவர், ஒருவர் தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்தும், மற்றொருவர் நிதித்துறையில் இருந்தும், மற்றொருவர் சமூக நலத்துறையில் இருந்தும் என மூன்று உறுப்பினர்களை அரசு நியமிக்கும்.

 இந்த ஆணையம், திறன் விளையாட்டு மற்றும் மற்ற விளையாட்டுகள் இடையே உள்ள வேறுபாட்டை காணும்.

 திறன் சார்ந்த விளையாட்டு தளங்களுக்கு உரிமை வழங்கும்.

 சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள், பதிவு செய்யப்படாத ஆன்லைன் தளங்களை கண்காணித்து விசாரிக்கும்.

 ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

 சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி மையம், ஆதரவு அமைப்பு அமைக்கப்படும்.

 முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, மாநில அரசு, கர்நாடக ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனுமதி பெறாத விளையாட்டு தளங்களை, இன்டர்நெட் சேவை வழங்குவோர் தடை செய்ய வேண்டும்.

 ரெய்டு நடத்தவும், பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

Advertisement