தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

சூளகிரி, சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடியிருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தில், 40 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் முரளி தலைமை வகித்தார்.

மாநில துணை செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் ராஜூ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன் உட்பட பலர், கோரிக்கை குறித்து பேசினர். தொடர்ந்து, சூளகிரி தாசில்தார் வளர்மதியிடம் மனு வழங்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில், தகுதியான இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

Advertisement