அரசு முதுகலை விரிவாக்க படிப்பு மையத்திற்கு... மூடுவிழா; மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி

விழுப்புரம் : விழுப்புரத்தில் இயங்கி வரும் அரசின் முதுகலை விரிவாக்க படிப்பு மையத்தை மூடுவதற்கான பணிகள் நடப்பதால், மாணவர்கள், கவுரவ விரவுரையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசின் முதுகலை விரிவாக்க படிப்பு மையம் கடந்த 2010-11ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சி யில் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு, கிராமப் புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வந்தது.

தொடக்கத்தில் எம்.ஏ., ஆங்கிலம், எம்.எஸ்சி., கணிதம், வேதியியல், எம்.காம்., வணிகவியல் என 4 முதுகலை படிப்புகள் இருந்தன. 2017-2018ம் கல்வியாண்டில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக எம்.எஸ்சி., விலங்கியல், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., என 4 துறைகள் சேர்க்ப்பட்டு 8 படிப்புகள் இருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2018-19ம் கல்வியாண்டில், இந்த உயர் கல்வி மையத்திற்கு தனியாக, விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மையத்தில் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்நிலையில், அண்ணா மலை பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகம் மாற்றிய நிலையில், நிதி நெருக்கடி காரணம் காட்டி, இந்த மையத்தை மூடும் வேலைகள் நடப்பதாகக் கூறி அந்த மையத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

மையத்தில், கடந்த 2020-21ம் ஆண்டில் எம்.பி.ஏ., பாடப்பிரிவை மட்டும் நீக்கம் செய்து, பிற 7 முதுகலை பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடந்தது.

2021ம் ஆண்டு இறுதியில் முதுகலை விரிவாக்க மையம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் என அறிவித்து துணைவேந்தரையும் நியமித்தனர்.

அதன் மூலம் 2021-22ம் கல்வியாண்டில், 7 முதுகலை பாடப்பிரிவில், 198 மாணவர்கள் சேர்க்கப் பட்டனர்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி வந்ததால், இந்த மையம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையமாக மாற்றப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு சென்று பயில முடியாத ஏழை மாணவர்களும், இங்கு படிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2024-25ம் ஆண்டில் திடீரென முற்றிலும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. செப்டம்பர் வரை அறிவிப்பு வெளியிடவில்லை.

அதன் பிறகு, ஆசிரியர்கள், மாணவர்கள் அப்போது அமைச்சராக இருந்த பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு தாமதமாக அறிவித்து, மாணவர் சேர்க்கை நடந்தது.

மாவட்டத்திலேயே விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி மற்றும் முதுகலை விரிவாக்க மையத்தில் மட்டும்தான் முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன.

ஆனால், இந்தாண்டு 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படாமல் உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு மட்டும் சேர்க்கை அறிவிப்பு கடந்த மே 10ம் தேதி வெளியிட்டது.

விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்திற்கு இதுவரை மாணவர் சேர்க்கை அறிவிக்கவில்லை. இதனால், இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வழியின்றி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த மையத்தில், தொடக்கத்தில் 117 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. பிறகு ஆண்டுக்கு 150, 200, 328 பேர் என உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் படித்து பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மையத்தை நிரந்தரமாக மூடும் போக்கில் செயல்படுகிறது.

இந்தாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடாதது, அதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஏழை மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் முதுகலை விரிவாக்க மையத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள், ஆசிரியர்கள் கூறினர்.

Advertisement