நாவல் பழம் தின்று 7 மாணவர் பாதிப்பு

பங்கார்பேட்டை : சாலையோரம் வீசப்பட்டிருந்த அழுகிய நாவல் பழங்களை தின்ற ஏழு மாணவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின் புத்ரசொன்னேனஹள்ளி கிராமத்தில், தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் பள்ளியின் வெளியே, சாலையோரம் அழுகிய நாவல் பழங்கள் வீசப்பட்டு இருந்தன. மதிய உணவு இடைவேளையில் வெளியே வந்த சில மாணவர்கள், அழுகிய பழம் என்பதை அறியாமல் நாவல் பழங்களை எடுத்துத் தின்றனர்.

இவர்களில் ஏழு மாணவர்களுக்கு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு மாணவர்கள் பங்கார்பேட் பொது மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

தகவலறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு வந்தனர். மாணவர்களுக்கு ஆபத்து இல்லை என, டாக்டர்கள் கூறியபின் நிம்மதி அடைந்தனர். கல்வித்துறை அதிகாரி குருமூர்த்தி, பங்கார்பேட்டை மருத்துவமனைக்கு சென்று, மாணவர்களை நலன் விசாரித்தார். டாக்டர்களிடம் தகவல் கேட்டறிந்தார்.

Advertisement