300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுல்தான்பேட்டையில், மூன்று ரேஷன் கடைகள், தெற்கு நல்லியாம்பாளையத்தில், இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம், வியாபாரிகள் கட்டாயப்படுத்தி ஒரு கிலோ அரிசி, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விலைக்கு வாங்குவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.


இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்.ஐ., கருணாகாந்தி தலைமையிலான போலீசார், நேற்று ப.வேலுார் சுல்தான்பேட்டையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்த பொத்தனுாரை சேர்ந்த ராமசாமி மகன் பொன்னர், 39, என்பவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர், 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Advertisement