திருவள்ளூர் புகார் பெட்டி

இணைப்பு சாலையில் பழைய பொருட்கள்



சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாபுரி சந்திப்பில் இருந்து புதுவாயல் செல்லும் இணைப்பு சாலையில், பழைய பொருட்களை சேகரிக்கும் கடை உள்ளது. இங்கு சேகரமாகும் பழைய பொருட்கள், இணைப்பு சாலையின் இருபுறமும் மலைபோல் குவிக்கப்படுகின்றன. ஆரணி, பெரியபாளையம் செல்லும் வாகனங்கள், இந்த இடத்தில் திரும்ப முடியாமல் கடும் அவதிப்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பழைய பொருள் கடையை எச்சரிக்க வேண்டும். மீறனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

- எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

நல்லதண்ணீர் குளம் தார்ச்சாலை சேதம்?



திருத்தணி நகராட்சி காந்தி நகர் பகுதியில் நல்லதண்ணீர் குளம் உள்ளது. இந்த குளக்கரையின் தார்ச்சாலை வழியாக, அதிகாலை 3:00 மணி முதல் நள்ளிரவு வரை ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நகராட்சி நிர்வாகம் முறையாக தார்ச்சாலையை பராமரிக்காததால், தற்போது சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.வெங்கடேசன், திருத்தணி.

வடிகால்வாய் ஆக்கிரமிப்பு அம்பத்துாரில் அட்டூழியம்



அம்பத்துார் டன்லப் அருகே உள்ள வானகரம் சாலையில், டன்லப் மைதானம் அருகிலிருந்து மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிவாசிகள் தங்களது வாகனங்களை, மழை நீர் வடிகால்வாய் மீது ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்தியுள்ளனர். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து சென்று, விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மழை நீர் வடிகால்வாயின் மேற்பகுதி சேதமடைகிறது. மேலும், மர பொருட்கள், ராட்சத பைப் உள்ளிட்டவையும் அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலாஜி, அம்பத்துார்.
Latest Tamil News

பாழடைந்த நிழற்குடையை சீரமைக்க எதிர்பார்ப்பு



பொன்னேரி - பெரும்பேடு வழித்தடத்தில், தேவராஞ்சேரி கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்தும், செடிகள் வளர்ந்தும் பாழடைந்துள்ளது. கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், பயணியர் பயன்படுத்துவதற்கே தயங்குகின்றனர். வெயில், மழையில் நிழற்குடைக்கு வெளியில், பேருந்திற்கு காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோ.கிருஷ்ணா, பொன்னேரி.

மின்விளக்கு வசதி இல்லாததால் அச்சத்தில் செல்லும் பெண்கள்



பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், அரசு கல்லுாரி முதல் வேண்பாக்கம் வரை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பணிகளுக்காக பஜாருக்கு சென்று வரும் பெண்கள், கல்வி நிலையங்களுக்கு சென்று வரும் மாணவியர், இருட்டில் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, மின்விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.கிருஷ்ணா, பொன்னேரி.

Advertisement