'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு

3


மதுரை : மதுரையில், கஞ்சா பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தவரையும், அவரது மகனையும் வீடு புகுந்து நான்கு பேர் கும்பல் பட்டா கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மதுரை, சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் பாண்டி, 55. இவரது வீட்டருகே பராமரிப்பற்ற கட்டடம் ஒன்றில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து, போலீசாருக்கு பாண்டி தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தார். பாண்டியின் உறவினரான ஒருவர் இதுகுறித்தும், சொத்து பிரச்னை தொடர்பாகவும் தகராறில் ஈடுபட்டு ஒருவாரமாக சிறையில் இருக்கிறார்.



இதன் காரணமாகவும், போலீஸ் கண்காணிப்பு காரணமாகவும் ஆத்திரமுற்ற அவரது கூட்டாளிகளான நான்கு ரவுடிகள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பாண்டி, மகன் கார்த்திக், 35, ஆகியோரை பட்டா கத்தியால் வெட்டி, 'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' என, மிரட்டி விட்டு சென்றனர். உயிர் பிழைக்க வீட்டினுள் பாண்டி, கார்த்திக் ஓடியபோது அவர்கள் மீது கற்களை வீசினர். காயமுற்ற தந்தையும், மகனும் சிகிச்சை பெறுகின்றனர்.


இது குறித்த சிசிடிவி காட்சி பரவியதை தொடர்ந்து, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அளித்த விளக்கம்:


கார்த்திக்கிற்கும், அவரது அத்தை மகன் நாகரத்தினத்திற்கும் சொத்து பிரச்னை உள்ளது. நாகரத்தினம் துாண்டுதலில் கார்த்திக் வீட்டில் இருந்த கேமராவை சேதப்படுத்தியதோடு, தடுத்த அவரையும் தாக்கினர். இதுதொடர்பாக, ஜெய்ஹிந்த்புரம் முத்துராமலிங்கம் 19, அருண்பாண்டி 19, பாலமுருகன் 20, ஆதீஸ்வரன் 19, நாகராஜ் 18, சரவணகுமார் 19, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பயன்படுத்தியது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் பாண்டி, கார்த்திக் தாக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement