பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை

சென்னை: 'குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகள் குறைந்தால், விசாரணை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருட்டு, செயின் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, களவு போன நகைகளின் எடையை குறைத்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் பதிவு செய்கின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்யும் போது, எப்.ஐ.ஆரில் குறிப்பிடாத நகைகளை போலீசார் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
நகைகளை திரும்ப ஒப்படைக்கும்போது, எப்.ஐ.ஆரில் எத்தனை சவரன் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த எடையுள்ள நகைகளை மட்டுமே, பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் ஒப்படைப்பர்.
வழிகாட்டி கையேடு
இதுபோன்ற செயலில் ஈடுபடும் போலீசார் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என, மண்டல ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துஉள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
புகார்தாரர் பறிகொடுத்ததாக கூறும் நகைகளின் முழு விபரங்களை, எப்.ஐ.ஆரில் குறிப்பிட வேண்டும்.
அத்துடன், குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை, உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஏற்கனவே வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றில் முறைகேடு நடப்பது தெரிய வந்ததால், அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை உடனடியாக படம் எடுத்து, ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
யாரிடம் இருந்து, எவ்வளவு எடையுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதையும், அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தையும் 'வீடியோ' ஆதாரமாக பதிவு செய்ய வேண்டும்.
எத்தனை மணிக்கு பறிமுதல் செய்யப்பட்டது; யார் யார் அந்த இடத்தில் இருந்தனர்; பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் யார் என்பது தொடர்பான வீடியோ மற்றும் படங்களை, டிஜிட்டல் ஆவணங்களாக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதிகாரியே பொறுப்பு
நகைகளை நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் போலீசாரே, அதற்கு முழு பொறுப்பு. நீதிமன்ற அனுமதியுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, விசாரணை அதிகாரியே ஏற்பார்.
அதில் 1 மில்லி கிராம் குறைந்தாலும், விசாரணை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.





மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!