'எங்களால பணி செய்ய முடியல' பொள்ளாச்சி நகராட்சியில் குமுறல்

2

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், நேற்று அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றாக கூடி, பணிகளை புறக்கணித்து நகராட்சி கமிஷனர் கணேசனை சந்தித்து முறையிட்டனர்.

அதிகாரிகள், ஊழியர்கள் பேசியதாவது:



பொள்ளாச்சி நகராட்சியில், கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீட்டால், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்ய முடியவில்லை. குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென்றால், நகராட்சிக்கு பணம் கட்டிய பின்னரே இணைப்பு வழங்க முடியும். ஆனால், பணம் கட்டுவதற்கு முன்பே, வேலை செய்ய சொல்லி கவுன்சிலர்கள் வற்புறுத்துகின்றனர்.


கேள்வி எழுப்பினால், மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். பொது இடத்தில் அத்துமீறி வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றுவதில் கூட தலையீடு அதிகரித்துள்ளது.



புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்களிடம் நேரடியாக பேசினால், உடனே சம்பந்தப்பட்ட கவுன்சிலர் அல்லது அவரது கணவர் போனில் தொடர்பு கொண்டு, மக்களிடம் நேரடியாக நீங்க பேசக்கூடாது. எங்கள் வாயிலாகத்தான் பேச வேண்டும் என கூறுகின்றனர். ஒவ்வொருரிடமும் பேரம் பேசுகின்றனர்.


குப்பை அகற்றுவதிலும் தலையிட்டு, இடைஞ்சல் செய்கின்றனர். தேர்தல் நெருங்குவதால், வரி வசூலிக்க வேண்டாம் என்கின்றனர். அன்றாட பணிகளை செய்வதைக்கூட, அவர்களைக் கேட்காமல் செய்யக்கூடாது எனக் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுடன், அச்சத்துடன் வேலை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகராட்சி கமிஷனர் கணேசன் பேசுகையில், ''அதிகாரிகள், கவுன்சிலர்கள் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கான பணியை செய்ய முடியும். இது குறித்து, நகராட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement