மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி ரூ. 4.19 கோடி சுருட்டியவர் கைது

விருதுநகர்: மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.4.19 கோடி மோசடியில் ஈடுபட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை, விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுரை திருப்பாலை ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் ராஜா. இவர் 2024ல் கோவையில் உள்ள ஓட்டல் சியோன் பிளாசாவில் மேலாளராக பணிபுரிந்த போது டிரோல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர்களான மதுரை ஆனையூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ், கூடல் நகரைச் சேர்ந்த சுந்தர் ராஜ் ஆகியோர் அறிமுகமாகினர்.

தாங்கள் பணிபுரியும் நிறுவனம், ராஜபாளையத்தை சேர்ந்த கங்காதரனின் மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளைகளை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த உள்ளதாகவும் கிளை உரிமை பெற்று தருவதாகவும், உணவுப்பொருட்கள், கடை முன்பணம், மாத வாடகை, லாபத் தொகையில் 10 சதவீதம், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என சுபாஷ் ராஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி ரூ.5 லட்சத்து 72 ஆயிரம் முதலீடு செய்தார். இதற்கான உரிமை ஒப்பந்தம் வழங்கியும், பிரியாணி கடை திறக்கப்படவில்லை. இதனால் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்ட போது ரூ.5.18 லட்சம், ரூ.50 ஆயிரம் என வழங்கப்பட்ட இரு காசோலைகளும் வங்கியில் பணமின்றி திரும்பின.

சுபாஷ் ராஜா விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், தமிழகத்தின் பல பகுதிகள், ஆந்திரா, கேரளாவில் மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் பெயரில் 81 பேரிடம் ரூ.4.19 கோடி மோசடி நடந்திருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து மரக்கார் பிரியாணி நிறுவனம், உரிமையாளர் கங்காதரன், சங்கர் கணேஷ், சுந்தர் ராஜ், சதீஷ் குமார், பிரவீன், சண்முக சுந்தரம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கங்காதரனை கைது செய்தனர்.

Advertisement