நாமக்கல்லில் ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'குட்பை' உணவு டெலிவரிக்கு 'சாரோஸ்' புதிய செயலி துவக்கம் 'சாரோஸ்' புதிய செயலி அறிமுகம்

நாமக்கல் : ஸ்விக்கி, சொமாட்டோ, 'ஆன்லைன்' கட்டணத்தை உயர்த்தியதால், ஹோட்டல் உரிமையாளர்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி, அந்நிறுவனங்களுக்கு உணவு சப்ளையை நிறுத்தினர்.

இதற்கு மாற்றாக, தற்போது நாமக்கல்லில், 'சாரோஸ்' என்ற புதிய செயலியில் உணவு டெலிவரியை துவக்கியுள்ளனர்.

நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட ஹோட்டல், பேக்கரிகளில் இருந்து ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு 'டெலிவரி' செய்து வந்தன.

விளம்பரம், டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., என பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்துகொண்டு, சொற்ப தொகையை மட்டும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.

இதனால் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. 'கமிஷன் தொகையை ஒழுங்குப்படுத்த வேண்டும்; தவறும் பட்சத்தில், ஜூலை, 1 முதல், ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு சப்ளையை முழுதுமாக நிறுத்துவோம்' என, ஹோட்டல் உரிமையாளர்கள் கெடு விதித்தனர்.

ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனத்தினர், ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், அந்நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்வது, ஜூலை 1 முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்நிறுவனங்களுக்கு மாற்றாக, திருப்பூரின் - அருகில், சென்னையின் - குய்க்கா, சிதம்பரத்தின் - சாரோஸ் போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினர். அதில், சிதம்பரம் சாரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், இந்த செயலி வாயிலாக டெலிவரியை துவங்கும் விழா நடந்தது.

நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம்குமார், செயலர் அருண்குமரன் தலைமையில், புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சாரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'ஜீரோ' கமிஷன் என்பதால், ஹோட்டல் விலைக்கே மக்களுக்கு உணவு கிடைக்கும்.

நிரந்தர கட்டணமாக, மாதத்திற்கு பெரிய ஹோட்டல்கள், 3,000 ரூபாய், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., மற்றும் சிறிய கடைகளுக்கு, 1,500 ரூபாய், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50 கடைகள் புதிய செயலில் இணைந்துள்ளோம்' என்றனர்.

@block_B@

40 நகரங்களில் 'சாரோஸ்'

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சாரோஸ்' சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதன் உரிமையாளர் ராம்பிரசாத். இந்த நிறுவனம் சிதம்பரம், விருத்தாச்சலம், ஜெயம்கொண்டம், பெரம்பலுார், திண்டிவனம், நாகப்பட்டினம், காரைக்கால் உட்பட, 40 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.block_B

Advertisement