துாத்துக்குடி பா.ஜ., ஆபீசில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

துாத்துக்குடி: முறையாக அனுமதி பெறாததால் துாத்துக்குடி பா.ஜ., அலுவலக குடிநீர் இணைப்பை மாநகாரட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

துாத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகம் மச்சாதுநகரில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட அலுவலகத்தில், மாநகராட்சி அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

நேற்று காலை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, முறைகேடாக இணைப்பு பெற்றது தெரியவந்து, அதிகாரிகள் இணைப்பை துண்டித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது வார்டைச் சேர்ந்த பிளம்பர் ஒருவர் உதவியோடு, பா.ஜ., அலுவலகத்திற்கு முறைகேடாக, எவ்வித அனுமதியும் பெறாமல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு, இதுவரை சொத்து வரி செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் கூறுகையில், ''முறைகேடாக இணைப்பு எடுக்கப்படவில்லை. தற்போது வரை லாரிகளில் தண்ணீர் பெற்றே பயன்படுத்துகிறோம்.

''மாநகாரட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளேன். அது விசாரணைக்கு வர உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற தகவலை கூறி வருகிறது,'' என்றார்.

Advertisement