பெங்களூரில் எத்தனை மாநகராட்சி? சிவகுமார் முக்கிய ஆலோசனை!

பெங்களூரு : 'கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் எத்தனை மாநகராட்சி உருவாக்கலாம்' என்பது குறித்து, அமைச்சரவை துணை குழுவினருடன், துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' தொடர்பான திட்டம் வகுக்க அமைக்கப்பட்டு உள்ள, அமைச்சரவை துணை குழுவினருடன், விதான் சவுதாவில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

துணை குழு தலைவரான உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ், எத்தனை மாநகராட்சி உருவாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி தொடர்பான இறுதி அறிக்கையை, அடுத்த வாரம் சமர்ப்பிப்பது பற்றியும் விவாதம் நடந்துள்ளது.

ஆலோசனைக்கு பின், சிவகுமார் கூறுகையில், ''கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் எத்தனை மாநகராட்சி அமைக்கலாம் என்று, இறுதி அறிக்கை கிடைத்த பின், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் விவாதிப்பேன். அவர்களது கருத்தையும் கேட்பேன். அதற்கு பின், அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் கூறுகையில், ''கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ், எத்தனை மாநகராட்சி அமைக்கலாம் என்பது பற்றி, அடுத்த வாரம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். இந்த அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருத்து அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

''இறுதி அறிக்கை சமர்ப்பித்த பின், துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் ஒரு முறை, எதிர்க்கட்சியினருடன் ஆலோசிப்பார்.

''மூன்றுக்கு மேற்பட்ட மாநகராட்சிகளும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் 80 முதல் 100 வார்டுகள் வரை அமையும். கட்சி சார்பாக எதிர்த்தாலும், தனிப்பட்ட முறையில் கிரேட்டர் பெங்களூருக்கு, எதிர்க்கட்சியினர் ஆதரவும் உள்ளது,'' என்றார்.

Advertisement