கே.ஆர்.எஸ்., அணையில் அத்துமீறல்: குப்பையாக்கும் சுற்றுலா பயணியர்

மாண்டியா : கே.ஆர்.எஸ்., அணையில் நீர்த்தேக்கப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், அப்பகுதியை குப்பையாக்கி வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் மீது அங்குள்ள மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை, 90 ஆண்டுகளுக்கு பின், ஜூனில் நிரம்பியது. அணையையும், பிருந்தாவன் பூங்காவையும் பார்க்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
அலட்சியம்
சிலர், எலவால் பேரூராட்சி வழியாக, மீனாட்சிபுரம் பகுதியில் அணையில் நீர்த்தேக்க பகுதிக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் வாகனங்களை, சோதனை செய்யாமல் அனுமதிப்பதாலும், சுற்றுலா பயணியரின் மோசமான செயல்பாட்டாலும் அணையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
சிலர் கரையில் அமர்ந்து உணவு சாப்பிடுவதும், மது அருந்துவதும் அதிகரித்துள்ளது. போதை தலைக்கு ஏறிய சிலர், பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டு நடனம் ஆடுகின்றனர். போதை தலைக்கேறிய சிலர், மற்ற சுற்றுலா பயணியருடன் கைகலப்பிலும் ஈடுபடுகின்றனர்.
சில வாலிபர்கள் நீரில் மேஜை, நாற்காலி போட்டு, மது மற்றும் உணவு அருந்துகின்றனர். அத்துடன், நீரில் கார்களில் வேகமாக செல்கின்றனர். இவ்வாறு செல்லும் வாகனங்கள் மண்ணில் சிக்கிக் கொண்டால், அருகில் உள்ள கிராமத்தினரை அணுகி, டிராக்டர் மூலம் அப்புறப்படுத்துகின்றனர்.
இத்தகைய செயல்பாடுகளால், பெண்களும், குழந்தைகளும் இங்கு வர தயங்குகின்றனர்.
அசுத்தம்
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் கூறியதாவது:
இங்கு வரும் பயணியர், மது அருந்தி விட்டு பாட்டில்கள், மீதமாகும் உணவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் உள்ளிட்டவற்றை கரையிலும், நீரிலும் வீசுகின்றனர். சிலர் கரையில் நின்றபடி இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதுபோன்ற இடங்களில் குடும்பத்தினருடன் வருவது சரியில்லை.
குடித்துவிட்டு காலியான பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். தண்ணீர் குடிக்க வரும் சில கால்நடைகளின் காலில் கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டு, அவதிப்படுகின்றன. அத்துடன், கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக சில விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள், நீர்த்தேக்க பகுதியில் கலக்கின்றன என்று பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இங்கு பல தீவுகள் உள்ளன. இதை மேலும் மேம்படுத்தலாம். அந்த பகுதிகள் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபோன்ற செயல்பாடுகள், இங்கு மட்டுமல்ல, கே.ஆர்.பேட், மைசூரு, ஸ்ரீரங்கபட்டணா என காவிரி கரையோரப்பகுதியிலும் நடக்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் உட்பட பலரும் விரும்புகின்றனர்.
� மது போதையில் நடனமாடிய இளைஞர்கள், குவிந்த சுற்றுலா பயணியரின் கார்கள். �கழிப்பறையாக மாற்றிய நபர். � சுற்றுலா பயணியரால் நீரிலும், கரையிலும் குவிந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை. � தண்ணீர் மேஜை, நாற்காலி போட்டு உணவு சாப்பிட்ட வாலிபர்கள். � தண்ணீரில் ஓட்டி வந்ததால் மண்ணில் சிக்கிக் கொண்ட ஜீப்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி