ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி நான்கு பேர் மீது வழக்கு பதிவு

காரைக்கால்: காரைக்கால் ஜிப்மர் மருந்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் நெடுங்காடு அகரமாங்குடியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி,36; தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2023ம் ஆண்டு நெடுங்காட்டை சேர்ந்த நீலமேகம்,45; காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையில் சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் கேட்டார்.

அதனை நம்பிய தட்சிணாமூர்த்தி முதல் கட்டமாக ரூ. ஒரு லட்சம் நீலமேகத்திடம் கொடுத்த தட்சணாமூர்த்தி, மீதி தொகையை வேலை கிடைத்தவுடன் தருவதாக கூறினார்.

பின்னர் தட்சிணாமூர்த்தியிடம் நீலமேகம் வேலைக்கான நியமன ஆணையை வழங்கி மீதி தொகை ரூ.1.50லட்சத்தை கோட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி ஜிப்மர் மருந்துவமனையில் விசாரணை செய்த போது பணி ஆணை போலி என்பது தெரியவந்தது. மேலும் நீலமேகம், காரைக்காலை சேர்ந்த சூசைமேரி, மங்கையர்கரசி, தரனிஷ், வாசுதேவன் ஆகியோரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.55 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் நீலமேகம் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த விக்கி (எ) ராஜகணபதி,25; ஜானகிராமன்,25; திருநள்ளார் காயத்ரி, 40; ஆகியோர் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement