காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

1

மாண்டியா : நண்பருடன் ஸ்ரீரங்கபட்டணா சென்ற ஆட்டோ ஓட்டுநர், வீடியோ எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்து, அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மைசூரு நகரை சேர்ந்தவர் மகேஷ், 36. ஆட்டோ ஓட்டுநர். இவர், தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவின் சர்வதர்மா ஆசிரமம் அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றார்.


நண்பர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். மகேசை நண்பர்கள் வீடியோ எடுக்க துவங்கினர். அவர், பின்னால் திரும்பாமலேயே, பின்நோக்கி நடந்தார். அப்போது கால் தவறி, காவிரி ஆற்றுக்குள் விழுந்தார்.



அப்போது, ஆற்றில் வெள்ளம் சென்றதால், மகேஷ் அடித்துச் செல்லப்பட்டார். கே.ஆர்.எஸ்., போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


அங்கு வந்த அவர்கள், மகேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், காவிரி நீராவரி நிகமம் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கை:


கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், சுற்றுலா வரும் பொது மக்கள், காவிரி ஆற்றின் கரையில் நிற்க வேண்டாம்.


சிலர் தங்கள் உயிரை பணயம் வைத்து, கரைபுரண்டு ஓடும் ஆற்றின் அருகில் நின்று 'செல்பி' எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்.


அசம்பாவிதம் நடக்காத வகையில், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், வருவாய் இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement