ரூ.6.72 கோடி செலவில் குறுகிய பாலங்கள் புனரமைப்பு பணி; முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறை, நீர்பாசன கோட்டத்தின் மூலம் உழவர்கரை பகுதியில் ரூ. 6.72 கோடியே 90 லட்சம் செலவில் பாலங்கள் புனரமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை, நீர்பாசன கோட்டத்தின் மூலம் உழவர்கரை பகுதியில் விடுபட்ட பள்ள வாய்க்காலில் பீச்சவீரன்பேட் லட்சுமிநகர் குறுக்கு சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதான சாலை வரை மற்றும் முத்துப்பிள்ளை பாளையத்தில் பல்வேறு குறுக்கு சாலையில் 7 குறுகிய பாலங்கள் புனர மைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணக்குமார், சிவசங்கர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயிபிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ், ஒப்பந்ததாரர் குணசேகரன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement