மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்

சென்னை: சென்னையில் புதிதாக சேவை துவங்கப்பட்ட மின்சார பேருந்துகளுக்கு சார்ஜ் ஏற்றும்போது பேட்டரி வெடித்தது. இதில், ஒப்பந்த ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், பயணியர் தேவை கருதியும் முதற்கட்டமாக, 207.90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 120 மின்சார பேருந்துகளின் சேவையை, முதல்வர் ஸ்டாலின், கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.

பிராட்வே - கிளாம்பாக்கம், வள்ளலார் நகர் - செங்குன்றம், பெரம்பூர் - மணலி உட்பட 11 வழித்தடங்களில், 120 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளுக்கான சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, வியாசர்பாடி பணிமனையில் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 32 'சார்ஜ் பாயின்ட்'டுகள் உள்ளன.

மின்சார பேருந்துகள் துவங்கிய முதல் நாள் முதல், தினமும் மூன்று பேருந்துகள் வரை ஆங்காங்கே, 'பிரேக் டவுன்' ஆகி நின்றுவிடும் நிலையில், பேட்டரி வெடிக்கும் சம்பவம் நடந்துள்ளது, பீதியை கிளப்பியுள்ளது.

வியாசர்பாடி பணிமனையில் நேற்று, மின்சார பேருந்துகளுக்கு சார்ஜ் ஏற்றும் பணியில் கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரைச் சேர்ந்த பரத்குணா, 32, மஹாராஷ்டிரா, மஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாம், 24, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மின்சார பேருந்தின் பேட்டரியை கழற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக பேட்டரியின் மல்டி மீட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், பரத்குணா, ஷாம் ஆகியோருக்கு இடது, வலது கைகளில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்த ஊழியர்கள் அவர்களை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனை, அடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீவிர பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

ஊழியர்களுக்கான காப்பீடு வசதி இருப்பதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


@quote@

அலட்சியம் கூடாது

மின்சார பேருந்துகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் போன்றவை வரவேற்கக்கூடியது. இவற்றைவிட, பயணியர் பாதுகாப்பு மிக முக்கியம். பணிமனையில் பேட்டரி வெடித்ததுபோல், பேருந்து ஓடும்போது நடந்தால் என்ன செய்வது? மழைக்காலத்தில் இந்த பேருந்துகளை எப்படி இயக்குவர் என தெரியவில்லை. பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பால் பர்ணபாஸ்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்புquote


@quote@

ஆய்வு அவசியம்

மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆங்காங்கே தீ பிடிப்பது அதிகரித்து வருகிறது. தற்போது, சென்னையில் மின்சார பேருந்துகளின் சேவை துவங்கியுள்ளது. இந்த பேருந்துகள் மீது பயணியருக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்த, ஐ.ஐ.டி., போன்ற பெரிய நிறுவனங்கள் மின்சார பேருந்துகள், அவற்றின் பணிமனைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

- சடகோபன்,
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்quote


@quote@

விசாரணைக்கு உத்தரவு

பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இயக்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில இடங்களில் மின்சார பேருந்துகள் பழுதாகி நிற்பதை தவிர்க்கவும், பயணியருக்கு தடையின்றி சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். பணிமனையில் பேட்டரி வெடிப்பு சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

- மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள்quote

Advertisement