ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை; சி.பி.ஐ., வழக்கில் கோர்ட் தீர்ப்பு

14

காரைக்கால்: நில விற்பனை அனுமதி சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர அமைப்பு குழு அதிகாரி உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சி.பி.ஐ., நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.



காரைக்கால், நல்லம்பல் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஞானராஜ். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு விற்பனை அனுமதி சான்று பெற, கடந்த 2017ம் ஆண்டு காரைக்கால் நகர அமைப்பு குழுவில் விண்ணப்பித்தார். அப்போது பணியிலிருந்த நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், உதவியாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதுகுறித்து ஜேக்கப் ஞானராஜ், சி.பி.ஐ.,யில் புகார் செய்தார்.

அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ., அறிவுரையின்படி, 22.6.2017ல், ஜேக்கப் ஞானராஜ் நகர அமைப்பு குழு அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதனை வாங்கிய ராஜேந்திரன், சிவராமகிருஷ்ணன் இருவரையும் கையும் களவுமாக சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். இருவர் வீடுகளில் சோதனையிட்டு பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும், காரைக்கால் சி.பி.ஐ., கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இவ்வழக்கு நீதிபதி மோகன் முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில், ராஜேந்திரன்,59; சிவராமகிருஷ்ணன், 67; இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement