செம்மங்குப்பம் ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமனம்

4

கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தைச் சேர்ந்தவர் ரயில்வே கேட் கீப்பராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதியது.விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.


விபத்துக்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும், சம்பவம் நிகழ்ந்த அந்த குறிப்பிட்ட பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்பட்டது. விபத்தை அறிந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பங்கஜை சரமாரியாகவும் தாக்கினர்.


தற்போது அவர் கைது செய்யப்பட்டுவிட, தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வடமாநில நபர் மொழி புரியாமல் விபத்துக்கு காரணமானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


இந் நிலையில், செம்மங்குப்பம் பகுதிக்கு புதிய ரயில்வே கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரின் பணி அனுபவம் 2 ஆண்டுகள் ஆகும். ரயில்வே விதிகளை பின்பற்றி கவனமுடன் பணியாற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.


இதனிடையே, விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தர இருக்கிறது. முதல்கட்டமாக இக்குழு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவ சங்கர், ரயில்வே அதிகாரிகள் உள்பட 13 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement