வீராணம் ஏரியில் இருந்து வெள்ளாற்றில் 360 கன அடி தண்ணீர் வெளியேற்றம் 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ்., மதகு வழியாக 360 கன அடி தண்ணீர் வெளியேற்றி வெள்ளாற்றிற்கு அனுப்பப்படுகிறது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரி துவங்கி லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் வரை மொத்தம் 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் கொண்டது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

1,465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். வீராணம் ஏரி மூலமாக டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஏரியில் தற்போது 1,160 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது. ஏரியில் இருந்து மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 73 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வருகிறது.

கோடையில் வரலாறு காணாத அளவில் கடந்த 4ம் தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக கீழணை கொள்ளிடம் வடவாற்றில் இருந்து 1,419 கன அடி தண்ணீர் வரத்து, ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி வி.என்.எஸ்., மதகை திறந்து விநாடிக்கு 360 கன அடி தண்ணீரை வெளியேற்றி வறண்ட நிலையில் காணப்படும் வெள்ளாற்றில் அனுப்பி வருகின்றனர்.

இந்த உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கும் பணியில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement