தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு

சென்னை: பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இருதரப்பும், தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், ஆறு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.
பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். இப்போது அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செயற்குழு கூட்டத்தை நடத்திய ராமதாஸ், வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை துவங்கி விட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக, சென்னை பனையூரில் பா.ம.க., அரசியல் தலைமைக்குழு கூட்டத்தை கூட்டிய அன்புமணி, 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் இல்லாமல் நடக்கும் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு எதுவும் செல்லாது' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
முன்னதாக, அருள் எம்.எல்.ஏ.,வை கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, சட்டசபையில் கட்சி இரண்டாக உடைந்தது.
அடுத்தக்கட்டமாக பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தயாராகி வருகிறார். அதற்கு வசதியாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அது பிரச்னையை மேலும் பெரிதாக்கி விடும் என்பதால், அதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தை அன்புமணியும் அணுக இருப்பதாக, அவரது அணியினர் தெரிவிக்கின்றனர்.


மேலும்
-
திருவாரூரில் கருணாநிதி சிலை திறப்பு
-
235 கிலோ கஞ்சா பறிமுதல் கோவையில் இருவருக்கு 'கம்பி'
-
கொலை முயற்சியில் தப்பிய வாலிபர் உயிரிழப்பு
-
ஒழுங்கா வேலை செய்யல ரயிலையும் கடத்தல... சிக்கினார் விரக்தி வாலிபர்
-
திருப்பூரில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து; பணம், உடைமைகளை இழந்து பொதுமக்கள் கதறல்
-
மனைவி கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக கணவன்