பண இரட்டிப்பு பெயரில் மோசடி ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது

பசவேஸ்வராநகர்: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி 20 பெண்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்த, பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதிகளுடன் நட்பு உள்ளது என்று பொய் கூறியதும் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசிப்பவர் சவிதா, 47. மகளிர் அமைப்புகளால் பணக்கார பெண்களுக்காக நடத்தப்படும் 'கிட்டி பார்ட்டி' எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு, 'டிப் டாப்' உடை, தங்க நகைகள் அணிந்து செல்லும் சவிதா, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும், பெண்களிடம் பேச்சு கொடுத்து, மொபைல் நம்பரை வாங்கிக் கொள்வார்.

வீட்டிற்கு சென்றதும் பெண்களை தொடர்பு கொண்டு பேசி, 'என் மகள் அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

அங்கு, 'நீங்கள் பண முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும். பணத்தை இரட்டிப்பாக்கித் தரும் தொழில் செய்கிறேன். வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு, தங்கம் வாங்கிக் கொடுக்கிறேன்.

'முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் எனக்கு நட்பு உள்ளது' என, ஆசைகாட்டி வலை விரிப்பார்.

சவிதாவின் பேச்சை நம்பிய 20 பெண்கள் 50 லட்சம் ரூபாய் முதல், 2.5 கோடி ரூபாய் வரை, இரட்டிப்பாக்கித் தருவதற்காக கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுக்கவில்லை.

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சவிதா மீது அந்த பெண், பசவேஸ்வராநகர் போலீசில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சவிதாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சவிதா, 20 பெண்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement