காங்., பொது செயலர் பிரியங்காவுடன் சிவகுமார் ஆலோசனை!: சோனியா, ராகுல், கார்கேவுடனும் இன்று சந்திப்பு

டில்லியில் முகாமிட்டுள்ள துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவை நேற்று சந்தித்து, அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சோனியா, ராகுல், கார்கேவையும் இன்று சந்திக்க உள்ளார். முதல்வர் பதவி கேட்டு டில்லியில், சிவகுமார் வலம் வருவதாக தகவல் பரவி, காங்கிரசில் பரபரப்பு நிலவுகிறது.
சித்தராமையா, சிவகுமாருக்கு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே முன்பு ஒப்பந்தம் போடப்பட்டதாக, சிவகுமார் அணியை சேர்ந்த ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இது உண்மையாக இருந்தால், வரும் நவம்பர் மாதம் முதல்வர் பதவியை சித்தராமையா விட்டு கொடுக்க வேண்டும். ஆனால், 'நானே 5 ஆண்டுகளும் முதல்வர்' என்று, அதிரடியாக அறிவித்தார் சித்தராமையா. 'என்னிடம் வேறு என்ன வழி உள்ளது. சித்தராமையாவுக்கு ஆதரவு கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று முகத்தை பாவமாக வைத்து பேசி, பரிதாபத்தை தேடினார் சிவகுமார்.
பீஹார் தேர்தல்
முதல்வர் மாற்றம் குறித்து விவாதம் நடந்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், நேற்று முன்தினம் டில்லி சென்ற சிவகுமார், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேசினார். இந்நிலையில் நேற்று காலை டில்லியில் உள்ள சோனியா வீட்டிற்கு சென்ற சிவகுமார், காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவை சந்தித்தார். இருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர்.
பிரியங்காவை சந்தித்த பின், சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் சந்திக்க, சிவகுமார் நேரம் கேட்டு இருந்தார். ஆனால், பீஹார் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், ராகுலை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சோனியா, கார்கேயையும் சந்திக்க சிவகுமாருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால், மூன்று பேரையும் இன்று சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவி கேட்பதுடன், பதவி குறித்து போடப்பட்ட ஒப்பந்தம் பற்றியும், மேலிட தலைவர்களிடம் நினைவுபடுத்துவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2023ல் தேர்தல் முடிந்த பின், முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுடன் மோதல் ஏற்பட்ட போது, சிவகுமாரை சமாதானம் செய்தது சோனியாவும், கார்கேயும் தான்.
இதனால், அவர்கள் இருவரிடமும் பேசும் போது, 'நீங்கள் கூறியதால் தான், பதவி ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இதனால் முதல்வர் பதவி கிடைக்க, நீங்களே எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்' என்று கேட்க உள்ளதாகவும், ஒப்பந்தத்தை மீறி சித்தராமையா அடிக்கடி பேசுவது பற்றி, 'போட்டு' கொடுக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று மாலை சிவகுமார் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. ஊடகங்கள் தான் அப்படி கூறுகின்றன. பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய, மல்லிகார்ஜுன கார்கே நாடு முழுதும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட அளவில் இருந்து, கட்சியில் மாற்றம் நடந்து வருகிறது.
கர்நாடகாவிலும் சில மாவட்டங்களின், காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ராகுலை நாளை (இன்று) சந்திக்க உள்ளேன். எம்.எல்.ஏ.,க்கள் கருத்துகளை கேட்க, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்துள்ளார். மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிப்பது பற்றி பேசினேன்.
தமிழகத்திற்கு பயன்
இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு தான், அதிக பயன் என்றும் எடுத்து கூறி உள்ளேன். பெங்களூரில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் குமாரசாமி, மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து முறையிட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், நேற்று டில்லி வந்த முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். நேரம் கிடைத்தால் சந்திப்பேன். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலையும் சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறேன். அவர் நேரம் கொடுத்தால் அவரையும் கண்டிப்பாக சந்திப்பேன்,'' என்றார்.
@block_B@
டில்லி சாணக்யபுரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கர்நாடக பவன் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இங்கு இரண்டு வி.வி.ஐ.பி., அறைகள் உள்ளன. அதில் ஒன்று முதல்வருக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. கர்நாடக பவனை திறந்து வைத்த சித்தராமையா, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார்.ஆனால், அந்த அறையின் கழிப்பறை வசதி குறைபாட்டாலும், சரியாக துாங்க முடியாததாலும், டில்லி செல்லும் போது எல்லாம் பழைய கர்நாடக பவனில் உள்ள தனது அறையில் தங்குகிறார். இதனால் புதிய கர்நாடக பவனில் முதல்வருக்கு ஒதுக்கப்பட்ட அறையை பயன்படுத்த, சிவகுமார் முடிவு செய்தார். இதற்கு முதல்வரிடம் அனுமதி கேட்டார்.அதற்கு, 'ஒரு பிரச்னையும் இல்லை. நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்' என்று சித்தராமையா அனுமதி கொடுத்ததால், முதல்வர் அறையில் சிவகுமார் தங்கி உள்ளார். block_B
- நமது நிருபர் -
மேலும்
-
இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்
-
மாநில அட்யா பட்யா விளையாட்டு போட்டி கடலுார் மாவட்ட அணிக்கு சான்று வழங்கல்
-
தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி பதக்கம் வென்று சாதனை
-
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்
-
கடலுாரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்