பா.ம.க., எதிர்காலம் நான் தான்; சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என்கிறார் ராமதாஸ்!

12

சென்னை: ''பா.ம.க., எதிர்காலம் நான் தான். சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் எதிர்க்குரல் பா.ம.க.விடம் இருந்து தான் ஒலிக்கும். அப்படியான எதிர்க்குரலின் வேகத்தால், ஆட்சியாளர்களால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள், அரசாணைகள், திட்டங்கள் ஏராளம். மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் யாரையும் எப்போதும் எதிர்க்கும் இடத்தில் பா.ம.க. நிற்கும் என்பதை என்னுடைய இறுதி மூச்சுவரை உறுதியாக கடைபிடிப்பேன்.

இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக நாம் முன்னெடுத்த போராட்டங்கள் லட்சத்தை தாண்டும். என்னைப் போன்று ஆரோக்கியமாக வாழுங்கள், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப் படுத்துகிறது. இன்னும் போராடச் சொல்கிறது.தெம்பும், தினவும் பா.ம,க., சொந்தங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.



பா.ம.க., சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பா.ம.க.,வினருக்கு தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது. அதன் சீற்றமும் குறையாது. மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement