விமானிகள் சம்பாஷணைகளை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள்: மத்திய அரசு விளக்கம்

6

புதுடில்லி: விமானிகளின் கடைசி நிமிட சம்பாஷணைகளை வைத்து ஆமதாபாத் விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது.



பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பான AAIB விசாரணை நடத்தி வருகிறது. தமது விசாரணையின் முக்கிய கட்டமாக விபத்து எப்படி நிகழ்ந்திருக்கிறது என்பது தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்து உள்ளது.


அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விமான எரிபொருள் விநியோகிக்கும் பொத்தான்கள், இன்ஜின்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, அவை பின்னர் செயலிழந்து போயிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதுதவிர, விமானிகளின் கடைசி நேர சம்பாஷணைகள் பற்றியும், அவர்களின் உரையாடல்களில் இடம்பெற்ற விஷயங்கள் என்ன என்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


ஒரு விமானி மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் பாதையை அடைத்தீர்களா? என்ற கேள்வியையும், மற்றொரு விமானி அளித்த பதில்களையும் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களையும் அறிக்கையில் விசாரணை அமைப்பு பதிவு செய்திருக்கிறது.


இந்த முதல்கட்ட அறிக்கை பல்வேறு தரப்பில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக கருத்துகள் பரவின.இந் நிலையில் தொடக்கக்கால விசாரணை அறிக்கையை முன் வைத்து விபத்துக்கான காரணம் என்ன என்பதை முடிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.


அறிக்கை குறித்தும், அதன் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது;


ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முதல்கட்ட விசாரணை அறிக்கையே. இறுதி அறிக்கை மற்றும் விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து வெளிப்படுத்தும் முன் பொதுமக்களும், ஊடகங்களும் தாங்களாகவே வேறு ஏதேனும் ஒரு முன் முடிவுக்கு வந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement