அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்

25

சென்னை: ''தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் ஆசிரமத்தில் அரசியல், ஆளுமை தலைமைத்துவம் குறித்த பயிலரங்கில், அண்ணாமலை பேசியதாவது: நமது வாக்காளர்கள் முழுவதும் வித்தியாசமானவர்கள்.

40% வாக்காளர்கள் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு தான் யாருக்கு ஓட்டளிக்க போகிறோம் என்பதை முடிவு செய்கின்றனர். சித்தாந்தத்தைப் பார்த்து கட்சிக்கு ஓட்டளிப்பதில் இருந்து வாக்காளர்கள் வெளியில் வந்து விட்டனர்.


ஒரு வாக்காளர் பல விஷயத்தை பார்க்கிறார்கள். பல விஷயத்தை பார்த்து ஓட்டு போடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார். என்ன மாடு எல்லாம் வாக்காளர் உரிமை கேட்கிறதா? இன்னொரு அரசியல் தலைவர் மரம் ஏறி கொண்டு இருக்கிறார். இன்றைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாத்தையும் செய்கிறார்கள்.


மாற்றம் வரவேண்டும் என்றால் முதலில் நீங்க சரியா இருங்க. கண்மூடித்தனமாக எந்த தலைவர்களையும் எதிர்க்காதீங்க. இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர். வெள்ளை சட்டை போட்டு நான்கு ரீல்ஸ் போட்டால் தலைவர் ஆகி விடுகிறார்கள். அதிகாரத்திற்கு வந்தாலும் செல்போனை ஒட்டுக் கேட்பது, பழி வாங்குவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது.


பழிவாங்கும் போக்கு அரசியல்வாதிக்கு இருக்கலாம், ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது. நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர். அரசியலில் எந்த பதவியும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்பு தான். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement