ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியும் ஊழலில் திளைக்கும் கேரளா: அமித் ஷா சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியும் ஊழலில் திளைத்து வருகின்றன என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆகியன ஊழல் ஆட்சி செய்தன என்பதே அவர்களின் கடந்த கால வரலாறு. கூட்டுறவு வங்கிகளில் ஊழல், ஏஐகேமரா ஊழல், பிபிஇ கிட் ஊழல், தங்கக்கடத்தல் ஊழல் என பல ஊழல்களை ஆளும் இடதுசாரி அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கிய நிதியை விட , மோடி அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.


ஊழல் இல்லாத நிர்வாகம், அரசு திட்டங்களில் பாகுபாடு இல்லாதவை மற்றும் அரசியல் லாபத்தை தாண்டி கேரளாவின் வளர்ச்சிக்காக பிரதமர் வைத்துள்ளார். பா.ஜ.,வும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியின் நலன் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை. ஆனால், கட்சியை விட மாநிலத்தின் நலனே பா.ஜ.,வுக்கு முக்கியம். கட்சி நலனை தாண்டி, மக்கள் நலத்திட்டங்களுக்கு பா.ஜ., முக்கியத்துவம் அளித்து வருகிறது.


2026 மார்ச் 31க்குள் நக்சலைட் இயக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெறும். பயங்கரவாதத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை விட வேறு யாரும் பதிலளிக்கவில்லை. உரி தாக்குதலுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலமும், புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படை தாக்குதல் மூலமும்,'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் நடத்தினோம். இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, கேரளாவில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜ., மாநில அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைத்தார். மாலை, கண்ணூர் சென்று ஸ்ரீராஜேஸ்வராகோவிலிலும் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.

Advertisement