காலத்தைக் கடந்து நிற்கும் காவல் அரண்மனை-செஞ்சி கோட்டை.

தமிழகத்தின் வரலாற்று மரபுகளைக் கூறும் சாட்சிகளில் ஒன்று செஞ்சி கோட்டை. இந்தியாவின் மிகக் கவனத்துடன் கட்டப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றாகும்.
செஞ்சி கோட்டையின் வரலாறு 9- ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. முதலில் சோழர்கள் மற்றும் பல்லவ அரசர்களால் கட்டியதாகக் கருதப்படும் இக்கோட்டையை, பின்னர் பல்வேறு அரசுகள் விரிவாக்கம் செய்து பயன்படுத்தினர். இக்கோட்டையின் தனித்துவமானது அதன் மூன்று மலைகளான ,ராஜகிரி, கிருஷ்ணகிரி, மற்றும் சந்திரயான்துர்க் ஆகிய மூன்று மலைகளை இணைத்து, முக்கோண வடிவில் 12 கி.மீட்டர் துாரத்திற்கு கட்டப்பட்ட மதில் சுவர்தான் இதன் விசேஷமே.
செஞ்சி கோட்டை, விஜயநகர பேரரசர்கள், மராத்தியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவர் ராஜா தேசிங்கு.ராஜா தேசிங்குவின் தந்தை ஸ்வரூப் சிங்,டில்லியை மையமாகக் கொண்டு ஆண்ட அவுரங்கசீப்பின் நம்பிக்கையை பெற்ற தளபதியாவார்.அவுரங்கசீப்பின் கீழ் செஞ்சி கோட்டை வந்ததும் அதை நிர்வாகம் செய்து ஆட்சி செய்ய ஸ்வரூப் சிங்கை 1698ல் அனுப்பிவைத்தார்.
அவரும் நல்லமுறையில் ஆட்சி செய்தார் எதிர்பாரத போரில் அவர் இறந்ததும் அவரது மகனான தேவா சிங் 12 வயதில் முடிசூட்டிக் கொண்டு அரியனை ஏறினார், சிறு வயதாக இருந்தாலும் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கினார்.19 வயதில் ஆர்க்காட்டின் நவாப் சதாதூப் கானுடன் ஏற்பட்ட போரில் வீரமரணம் அடைந்தார்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் எதிரே இருந்த போதும் அஞ்சாமல் குதிரையில் வாளைச் சுழற்றியபடி சென்று பலரைக் கொன்ற பின் மரணத்தை சந்தித்த மாவீரன் அவர்.வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜபுத்திர வீரன் என்றாலும் தமிழ் மண்ணை தன் தாய்மண்ணாகக் கொண்டு காத்திட போரிட்ட தேவா சிங்கை,அவரது வீரத்திற்காகவும் தியாகத்திற்காகவும் ராஜா தேசிங்காக மக்கள் போற்றிப் புகழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.
செஞ்சி கோட்டையின் உள் பகுதிகளில் உள்ள அரண்மனை வளாகங்கள், நீர்தேக்க தொட்டிகள், அரச மண்டபங்கள், மலைக்குட்பட்ட பாதைகள் ,ஆயுதக்கிடங்குகள் என அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் உள் கோவில்கள், குறிப்பாக வீரராகவன் கோவில், இன்றும் வழிபாட்டிற்கும் பார்வைக்கு வருபவர்களுக்கும் வியப்பை தரும் இடமாக உள்ளது.
2025 ஆம் ஆண்டு, செஞ்சி கோட்டை “Maratha Military Landscapes of India” என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே கோட்டையாக சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.
இப்படி வரலாற்றின் பக்கங்களில் அதிகம் சொல்லப்பட்டாலும், அதற்குரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருந்தது, அந்த ஆதங்கம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் என்ற இப்போதைய அறிவிப்பால் தீர்ந்துள்ளது
இனி உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணியர் அதிகம் பேர் செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவர், அப்படி வருபவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பதே யுனெஸ்கோவின் அறிவிப்பிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.
-எல்.முருகராஜ்

மேலும்
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
-
ஐஐஎம் ஆண்கள் விடுதியில் பலாத்காரம் என பெண் புகார்: தந்தை மறுப்பு
-
போலி எக்ஸ் கணக்குகளால் இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து; எச்சரிக்கும் ஈரான் தூதரகம்
-
டிரம்ப் நிர்வாகத்துடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி; ரூ.1,700 கோடியை செலுத்த முன்வரும் கொலம்பியா பல்கலைக்கழகம்
-
கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!
-
ஹிமாச்சலை புரட்டிப்போடும் கனமழை; இதுவரையில் 92 பேர் பலி