வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு

27


சென்னை: தமிழக பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறையில் கடைசி பெஞ்ச் என்று எதுவும் இருக்கக் கூடாது, அனைத்து மாணவர்களும் முதல் பெஞ்ச் மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய மலையாள திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவர். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் இருப்பது வாடிக்கை.இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது.


அதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை கேரளாவில் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் ' படம் வலியுறுத்தியது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும்.


பெரும் வரவேற்பை இந்த நடைமுறை கேரளாவில் பள்ளிகளில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி 8 பள்ளிகளில் இதுபோன்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா தொடங்கி வைத்த இந்த முறை தற்போது, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் வரை தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. பள்ளிகளில் U வடிவ முறையில் பெஞ்சுகள் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.


இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளில், இந்த நடைமுறையை பின்பற்ற பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கவனிக்க முடிவதுடன், கலந்துரையாடலையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வகுப்பறைகளின் அளவு மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த முறையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த தலைமை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


வகுப்பறைகளில் ஒவ்வொருவரின் குரல்கள் கவனிக்கப்படுவது உறுதி செய்வதன் மூலம், கற்றல் என்பது கலந்துரையாடலமாக அமையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் எதிரெதிர் திசையில் அமரும் போது ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்று கொள்ள முடியும். அனைத்து மாணவர்களும் முன்வரிசையில் அமர்வர். சிறந்த கற்றல் உறுதி செய்யப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement