மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,

7


கடலூர்: '' மக்களின் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது. இதனால் தான் விடுபட்ட மகளிருக்கும், விதிகளை தளர்த்தி மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டினார்.

மக்களை பாதுகாத்தோம்

கடலூரில் நடந்த பேரணியில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பெண் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடு, கோழி, கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்திவிட்டது. எங்கள் மீது கோபம் இருந்தால், எங்களுடன் பேசுங்கள். ஏழை மக்களின் திட்டங்களை ஏன் நிறுத்தினீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனை வழங்குவோம். ஏழைகள், மக்கள் பாதிக்கும் போது ஓடோடி வந்த அரசாக அதிமுக அரசு இருந்தது.


எதிர்ப்பு காரணம்
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தது. ஆனால், 28 மாதங்கள் வழங்கப்படவில்லை. பெண்களிடம் எதிர்ப்பு வரும் என்பதாலும், அதிமுக தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் கொடுத்தார். பெண்கள் மீது இரக்கப்பட்டு கொடுக்கவில்லை. தற்போது விடுபட்டவர்களுக்கு, விதிகளை தளர்த்தி, 30 லட்சம் பெண்களுக்கு ரூ. ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். தி.மு.க., மக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டது. எட்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. தற்போது 52 மாதங்கள் பிறகு, மாதம் ஆயிரம் வழங்குவோம் நிதி வழங்குவோம் என்று சொல்கிறீர்களே ?இது நியாயமா, மக்களை ஏமாற்றுவது இல்லையா? தேர்தலுக்காக முன்கூட்டியே மாதந்தோறும் நிதி கொடுத்து தந்திரமாக ஓட்டு பெற உள்ளனர். உஷாராக இருக்க வேண்டும்.


சூப்பர் முதல்வர்
கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதல்வராக உள்ளார். ஆயிரம் ரூபாய் தொகையை கூட அரசின் வருமானத்தை அதிகரித்து கொடுக்கவில்லை. கடன் வாங்கி தான் கொடுத்துள்ளார். இந்தக் கடன் உங்கள் மீது தான் வந்து விழும். ஸ்டாலினுக்கு வருவதற்கு முன்பு, காங்., திமுக,அதிமுக ஆட்சி மாறி மாறி நடந்தது. 2021ம் ஆண்டு 5 .18 லட்சம் கோடி கடன் இருந்தது.
ஸ்டாலின் 4 ஆண்டுகளல் 4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார். 2025 -2026 சட்டசபை தேர்தலுக்குள் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்காகவா ஆட்சி கொடுத்தனர். பிறக்கும் குழந்தை மீதும் 1.5 லட்சம் கடன் உள்ளது. கடன் மேல் கடன் வாங்கி மக்களை தத்தளிக்கவிட்ட அரசு திமுக., அரசு. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

Advertisement