டிரம்ப் நிர்வாகத்துடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி; ரூ.1,700 கோடியை செலுத்த முன்வரும் கொலம்பியா பல்கலைக்கழகம்

வாஷிங்டன்: யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய கொலம்பிய பல்கலைக்கழகம், டிரம்ப் அரசு நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.1,700 கோடியை செலுத்த அப்பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.


யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த செயலால் அதிர்ந்து போன கொலம்பியா பல்கலை, டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமான நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்தது. பல்கலை வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் முகமூடிகள் அணிய தடை விதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு ஆய்வு துறையின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


இந்த நிலையில், ஆராய்ச்சி நிதியை திரும்பப் பெறும் விதமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த கொலம்பியா பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த தயாராக இருப்பதாகவும், இதற்காக அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


இதேபோல, ஹார்வர்டு, கார்னெல் மற்றும் நார்த்வெஸ்டர்ன் உள்ளிட்ட பல்கலைகளுடனும் அதிபர் டிரம்ப் அரசு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. டிரம்ப்பின் செயல்பாட்டை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், கொலம்பியா பல்கலை டிரம்ப்புடனான பிரச்னைக்கு தீர்வு காண முன்வந்துள்ளது.

Advertisement