ஐஐஎம் ஆண்கள் விடுதியில் பலாத்காரம் என பெண் புகார்: தந்தை மறுப்பு

4

கோல்கட்டா: கோல்கட்டாவில் உள்ள ஐஐஎம் ஆண்கள் விடுதியில், பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனால், பலாத்காரம் ஏதும் நடக்கவில்லை. அவர் ஆட்டோவில் தவறி விழுந்துவிட்டார். தற்போது நலமாக உள்ளதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.


கோல்கட்டாவில் ஐஐஎம்., செயல்படுகிறது. இங்கு உளவியலாக ஆலோசகராக பணியாற்றும் பெண் ஒருவர் கோல்கட்டா போலீசில் புகார் அளித்தார். அதில், விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர், ஆலோசனை தேவை என அழைத்தார். அப்போது பீட்சா மற்றும் குடிநீர் வழங்கினர். இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. பிறகு நினைவு திரும்பிய போது, பலாத்காரம் செய்து துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது எனத் தெரிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில், பிஎன்எஸ் 64 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்நாடகாவை சேர்ந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட மாணவியை, கவுன்சிலிங் வருமாறு ஆண்கள் விடுதிக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற போது, குடிக்க குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் மயக்க மருந்து கலந்து இருந்தது. அதனை அருந்திய மாணவி, மயங்கி விழுந்தார். பிறகு கண் விழித்து பார்த்தபோது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்ததுள்ளது. பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டது அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் தான். மேலும், இதனை வெளியில் தெரிவித்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவரை விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு, கோல்கட்டாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், கோல்கட்டா சட்டக்கல்லூரியில், கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால், திடீர் திருப்பமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இன்று மதியம் பேட்டி ஒன்று அளித்தார். அதில், தனது மகளிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை. பாலியல் அத்துமீறல் ஏதும் நடக்கவில்லை. மாணவர் கைது செய்யப்பட்டது ஏதும் அவருக்கு தெரியாது. எனது மகள்நலமுடன் உள்ளார். தூக்கத்தில் உள்ளார். நேற்று இரவு, எனது மகள் ஆட்டோவில் இருந்து விழுந்து மயக்கம் அடைந்ததாக போன் வந்தது. பிறகு மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கிருந்து போலீசார் அழைத்துச் சென்றனர் எனத் தெரிவித்தார்.


இருப்பினும் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, புகாருக்கு நேர்மாறாக தந்தை பேட்டி கொடுத்துள்ளது குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்த மாணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement