சிறு மழைக்கே குளமானது துராபள்ளம் இணைப்பு சாலை

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் அமைந்துள்ள துராபள்ளம் பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், துராபள்ளம் பஜார் அமைந்துள்ளது. இங்கு, மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாததால், எப்போது மழை பெய்தாலும், துராபள்ளம் பஜார் பகுதி முழுதும் சகதி காடாக மாறிவிடும்.

இரு நாட்களுக்கு முன் பெய்த சிறு மழைக்கே, துராபள்ளம் பஜார் பகுதி அமைந்துள்ள இணைப்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், பாதசாரிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். துராபள்ளம் பஜார் பகுதியில் மழைநீர் வடிந்து செல்லும் வசதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement