காசா நிவாரண முகாம்களில் 6 வாரங்களில் 798 பேர் பலி
ஜெருசலேம்:பாலஸ்தீனத்தின் காசாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்கள் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில், கடந்த ஆறு வாரங்களில் 798 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, 2023 அக்டோபரில் போர் துவங்கியது.
காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.
இங்கு நாளொன்றுக்கு ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
சிலர் ஆத்திரமடைந்து, பாதுகாப்புக்கு நிற்கும் இஸ்ரேல் படையினரை தாக்குகின்றனர்.
இதையடுத்து, நெரிசலை சமாளிக்க, இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். மே 27 துவங்கி ஜூலை 7 வரையிலான ஆறு வாரத்தில் மட்டும், 798 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., மனித உரிமை கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது.
நிவாரண உதவிகளை அதிகரிப்பதே உயிரிழப்புகளை தடுக்கும் என, காசா மனிதாபிமான அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.