புதிய ஜவுளி ஆர்டர்கள் கைப்பற்ற கைகொடுக்குமா?

திருப்பூர், : உலக அளவிலான ஆயத்த ஆடை இறக்குமதியில், ரஷ்யா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த ஆண்டில் (2024), 59 ஆயிரத்து, 684 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை இறக்குமதி செய்துள்ளது; அவற்றில், பின்னலாடைகள் மட்டும், 56.9 சதவீதம்.

ரஷ்ய ஆயத்த ஆடை இறக்குமதியில், சீனா, 49.3 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் 15 சதவீத பங்களிப்புடன் உஸ்பெகிஸ்தானும், 10.4 சதவீத பங்களிப்புடன் இத்தாலி மூன்றாவது இடத்திலும் உள்ளது. 1.4 சதவீத பங்களிப்புடன் இந்தியா, 9வது இடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து, 101.5 பில்லியன் டாலர் (863 கோடி ரூபாய்) ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவின் மொத்த இறக்குமதி குறைந்திருந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ்கோவில் உள்ள குரோக்கஸ் கண்காட்சி அரங்கில், செப்., 2ல் துவங்கி, 5ம் தேதி வரை, 'கலெக் ஷன் பிரிமியர் மாஸ்கோ' கண்காட்சி நடக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதன் வாயிலாக, புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்புள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில், 44வது முறையாக நடக்க உள்ள இக்கண்காட்சி முற்றிலும் மாறுபட்ட வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ரஷ்யாவில் சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, போர் தணியும் வாய்ப்பு உருவாகியுள்ளதாலும், கையிருப்பு ஆடைகள் தீர்ந்துவிட்டதாலும், நடப்பு ஆண்டில் துவங்கி, மேலும் சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், புதிய வாய்ப்புகளை அள்ளலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், புதிய வாய்ப்புகளை அள்ளலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

ஏற்றுமதி உயரும்

ரஷ்யா - இந்தியா இடையேயான வர்த்தகம் மிகக்குறைவாக இருந்தது. நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிப்பதால், 0.5 சதவீதமாக இருந்த ரஷ்யாவுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரே ஆண்டில், 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது; இது, வரும் ஆண்டுகளில், மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கண்காட்சியில், 30 நாடுகளை சேர்ந்த, 900 'பிராண்ட்'கள் மற்றும் 22 ஆயிரம் சில்லரை வர்த்தகர்கள் பங்கேற்க இருப்பதால், இந்தியா பங்கேற்றால் புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்புள்ளது. வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, www.aepcindia.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

- ஏ.இ.பி.சி., நிர்வாகிகள்

Advertisement