சாலையோரம் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் பஸ்களால் நெரிசல்: விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்


நாமக்கல் :சாலையோரம் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் பஸ்களால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலையை கடந்த செல்லும் வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி விழி பிதுங்குகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதற்காக, முதலைப்பட்டியில் உள்ள ஹிந்து சமய அறநிலைய துறையினருக்கு சொந்தமான, 12.90 ஏக்கர் நிலத்தில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொகையும், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், 2022 அக்., 20ல், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், 2024 செப்., 22ல், தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, 2024 அக்., 10ல், பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி, துறையூர், ப.வேலுார், மோகனுார் பகுதியில் இருந்து வரும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், வெளியே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. குறிப்பாக, புது பஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் அனைவரும் அவ்வழியை கடந்து செல்வதற்குள் விழிபிதுங்குகின்றனர்.
இந்த பிரச்னை தினமும் அரங்கேறி வருகிறது. அவற்றிற்கு தீர்வு காண, பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட நிலையில், தற்போது நகரில் மீண்டும் நெரிசல் ஏற்படுவது, பொதுமக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement