தைலாபுரத்தில் துப்பறியும் ஏஜென்சி விசாரணை

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வழக்கமாக உட்காரும் இருக்கை அருகிலுள்ள சோபாவின் கீழ் பகுதியில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது, சமீபத்தில் கண்டறியப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.


லண்டனில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த அந்த கருவியை வைத்ததன்; பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.



இதையொட்டி, அவர் வழக்கமாக உட்காரும் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதியதாக நேற்று இருக்கைகள் போடப்பட்டு, அதில் ராமதாஸ் உட்கார்ந்தார்.


இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் துப்பறியும் ஏஜென்சியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10:30 மணியிலிருந்து தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

ஒட்டு கேட்கும் கருவி எப்போது பொருத்தப்பட்டது; அதன் மூலம் என்னென்ன தகவல்கள், யார் யாருக்கு பரிமாறப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராமதாஸ் கூறியதாவது:



ஒட்டு கேட்பு கருவி தொடர்பாக, தைலாபுரம் தோட்டத்தில் ஆய்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு, தனியார் ஏஜென்சி கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

பொதுக்குழு கூட்டுவதற்கான காலம் வரவில்லை. அந்த சமயத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இந்த பிரச்னையில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என கேட்கின்றனர். சந்தேகம் இருக்கிறது.


ஆனாலும், ஆய்வு நடத்தும் தனியார் ஏஜென்சி கொடுக்கும் ஆய்வு அறிக்கைக்குப் பின் தான், எந்த முடிவுக்கும் வர முடியும்.



ஆனால், யாராக இருந்தாலும், இந்த விஷயத்தில் தப்ப முடியாது. கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

'சைபர் க்ரைம்' விசாரணை தேவை!

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அமரும் நாற்காலிக்கு அருகில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்தது குறித்து, வெளியாகி இருக்கும் தகவலை அடுத்து, அன்புமணி ஆதரவாளரான பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு அளித்த பேட்டி: திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில், ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ராமதாஸ், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் காட்டுகிறது.இந்த விவகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள், ராமதாசை நேசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால், அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக அந்த கருவி பொருத்தப்பட்டது என்ற உண்மையை மக்களுக்கும், பா.ம.க.,வினருக்கும் தெரிவிக்க வேண்டியது, அரசின் கடமை.எனவே, இதுகுறித்து சைபர் குற்ற பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும். ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என தெரிந்தால், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.block_B




-- நமது நிருபர் -

Advertisement