50,000 பூத் கமிட்டிகள் உள்ளனவா? உண்மை கண்டறியும் சோதனை பா.ஜ.,வில் இன்று துவக்கம்

சென்னை: தமிழக பா.ஜ.,வில், 50,000 பூத் கமிட்டிகள் உண்மையிலேயே அமைக்கப்பட்டு உள்ளனவா என்பதை அறிய, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி லோக்சபா தொகுதிகளில், இந்த சோதனை இன்று துவங்குகிறது.
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. மாவட்ட தலைவர் தலைமையில் மையக் குழு, மண்டலம், கிளை அளவில் நிர்வாகிகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டியது.
இதற்காக அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்க, மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 68,000 ஓட்டுச்சாவடிகளில், பா.ஜ.,வுக்கு, 50,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, கட்சி தலைமையிடம் மாவட்ட தலைவர்கள் அறிக்கை அளித்தனர்.
ஆனாலும், அந்த தேர்தலில், பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., அனைத்து மாவட்டங்களிலும் 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.
இதற்கு முதல் கட்டமாக, பூத் கமிட்டிகள் பலப்படுத்தப்பட உள்ளன. அதனால், உண்மையிலேயே 50,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளனவா; ஒவ்வொரு கமிட்டியிலும், 12 பேர் உள்ளனரா என்பது தொடர்பாக, லோக்சபா தொகுதி வாரியாக ஆய்வு செய்ய, தமிழக பா.ஜ., முடிவு செய்து உள்ளது.
இந்த ஆய்வு, முதல் கட்டமாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி ஆகிய லோக்சபா தொகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
இந்த சோதனையில், கட்சியின் தீவிர விசுவாசிகள், 2,000 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒருவருக்கு மூன்று பூத்கள் என்று ஒதுக்கப்பட்டு, உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட உள்ளது.